×

காவிரி சமவெளிப்பகுதியில் ஹைட்ரோ கார்பன், கெயில் குழாய் பதிப்பு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்

தஞ்சை, பிப்.12: காவிரி சமவெளிப்பகுதியில் ஹைட்ரோகார்பன், கெயில் குழாய் பதிப்பு போன்ற பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி சமவெளிப்பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து இதை சட்ட வல்லுநர்களை ஆலோசித்து தனிச்சட்டம் இயற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் ஆபத்துகளையும், பின் விளைவுகளையும் காவிரி சமவெளிப் பகுதி பாலைவனமாக மாறிவிடும் என்ற அச்சத்தால் அதை எதிர்த்து போராடிய மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்.

ஹைட்ரோகார்பன், கெயில் குழாய் பதிப்பு போன்ற அனைத்து திட்ட வேலைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழக முதல்வர் வெறும் அறிவிப்புடன் நின்றுவிடாமல் உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஏனெனில் மத்திய அரசு ஏற்கனவே கடலூர், நாகை, மயிலாடுதுறை பகுதிகளை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்துள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : plains ,Cauvery ,
× RELATED சமவெளியில் ஏற்றுமதி தரத்தில் மிளகு...